

விழுப்புரம்: மரக்காணம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் லாரி உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகமிற்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து கீழ்புத்துப்பட்டு கிராமத்திற்கு நேற்று இரவு திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகம் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் உதயகுமாருக்கு சொந்த இடத்தில் ரகசியமாக மணல்குவாரி செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த ரகசிய மணல் குவாரிக்குள் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகம்சென்று பார்த்த போது ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல அடி ஆழத்திற்கு மணல் எடுத்து குவித்துவைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அங்கு மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம், டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உதயகுமார் பதவிவகித்து கொண்டு, தனது ஆளும் கட்சி பதவியை பயன்படுத்தி, கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாகரகசிய மணல் குவாரி அமைத்து பல அடி ஆழத்திற்கு மணலை அள்ளி எடுத்து கடத்தி சென்றுவிற்பனை செய்து வந்திருக்கிறார்.
அதன் மூலம் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதுதெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உதயகுமார் மீது கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரகசிய மணல் குவாரி நடத்தி பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி மோசடியில் ஈடுபட்டு, தற்போது தலைமறைவாக இருந்துவரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உதயகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.