

நாய் குறைத்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள பூக்கொல்லையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (49). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நெய் கிருஷ்ணன். மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர்கள் இருவருக்குக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நெய் கிருஷ்ணன் அவ்வழியாக சென்றபோது, முத்துகிருஷ்ணன் வீட்டில் வளர்ந்து வரும் நாய் குரைத்துள்ளது. இது தொடர்பாக முத்துகிருஷ்ணனுக்கும், நெய் கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் கட்டை, இரும்புக் கம்பியால் தாக்கிக் கொண்டதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். நெய் கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நெய் கிருஷ்ணனை கைது செய்தனர். நாய் குரைத்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அடித்துக் கொல்லப்பட்ட செய்யப்பட்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.