

சென்னை: பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியிலும் நேற்று காலை பொங்கள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தாமதமாக வந்த மாணவர்கள் யாரும் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாலையை பூட்டப்பட்ட நுழைவாயிலில் போட்டுவிட்டு அங்கு நின்றவாறு கோஷமிட்டனர். சில மாணவர்கள் கல்லூரி எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அங்கும் இங்குமாக ஓடினர்.
சிலர் ஒன்று திரண்டு, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்தனர். பின்னர், பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்டதோடு கூச்சலிட்டு ரகளையிலும் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸாரை கண்டதும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
இந்நிலையில், பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என வீடியோ காட்சிகள் மூலம் போலீஸார் அடையாளம் கண்டு வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.