

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கைகோத்து செயல்பட்டு, கோடி கணக்கான ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள சைதாப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ.யை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்தி முனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதில், சிறப்பு எஸ்.ஐ ராஜா சிங், வருமானவரித்துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐயாக பணி செய்து வரும் சன்னி லாய்டு என்பது தெரியவந்தது.
சிறப்பு எஸ்.ஐ சன்னி லாய்டு மட்டும் தனியாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக வழிப்பறி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், வழிப்பறி செய்த பணத்தில் ஜாம்பஜார் பகுதியில் ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம் அமைத்திருப்பதாகவும், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரிசார்ட் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சன்னி லாய்டு பூக்கடை காவல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தபோது தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டாராம். இதேபோல், மேலும் சில வழக்குகளிலும் சிக்கி இருந்தாராம். இதனால் 3 முறை பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், சில உயர் அதிகாரிகளின் தயவால் மீண்டும் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு, இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னி லாய்டு மற்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, அதை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறி அவர்களே வைத்துக் கொண்டு பங்கு போட்டுக் கொள்வார்களாம். குறிப்பாக பூக்கடை, ராயபுரம், நேப்பியர் பாலம், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் போன்ற பகுதிகளில் இப்படி கோடிக் கணக்கில் ஹவாலா பணத்தை சுருட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமானதைத் தொடர்ந்து அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சன்னி லாய்டுவை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படையி அவரது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியிலும், மற்றொரு தனிப்படை சென்னையிலும் தேடி வருகிறது. அவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.