ராணிப்பேட்டையில் லாரி மீது கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்

ராணிப்பேட்டையில் லாரி மீது கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்
Updated on
3 min read

ராணிப்பேட்டை: சிப்காட் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து எதிரே வந்த காய்கறி லோடு லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் ஓட்டுநர், விவசாயி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியைச் சேர்ந்த 45 பேர் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று வந்தனர். இதற்கான கர்நாடகா மாநில அரசுக்கு சொந்தமான பேருந்தில் அவர்கள் பயணம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து அனைவரும் கோலார் மாவட்டம் செல்ல புறப்பட்டனர்.

கர்நாடகா அரசு பேருந்து ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 11.45 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது எமரால்டு நகர் பகுதியில் முன்னாள் சென்ற டிப்பர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் இருந்து 16 டன் எடையுள்ள காய்கறி லோடு ஏற்றிய ஈச்சர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்து அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், நள்ளிரவில் அயர்ந்து உறங்கி வந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர்.



இந்த கோர விபத்தில் ஈச்சர் லாரியின் ஓட்டுநர் மஞ்சுநாதன் (30), லாரி கிளினர் சங்கர் (32), விவசாயி கிருஷ்ணப்பா (65), கணக்காளர் சோமசேகர் (30), ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா தலைமையில், ராணிப்பேட்டை டிஎஸ்பி திருமால், சிப்காட் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த கர்நாடகா அரசு பேருந்தில் சிக்கியவர்களை பாதுகாப்புடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், அதிக காயமடைந்த 6 பேர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும், அரசு பேருந்து ஓட்டுநர் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அரசு பேருந்து ஓட்டுநர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சாலை விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர், விவசாயி உட்பட 4 பேரின் உடல்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் பொக்லைன் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய அரசு பேருந்து மற்றும் ஈச்சர் லாரியை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். இதில், லாரியில் கொண்டு வரப்பட்ட 16 டன் காய்கறிகள் சாலையோரம் குவியல், குவியலாக கொட்டியது.

விபத்தில் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்நாடகா மாநில பக்தர்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (வியாழன்கிழமை) காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தேவையான மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேல் மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விபத்தில் காயமடைந்ததும், சென்னைக்கு காய்கறி லோடு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர், விவசாயி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சாலை விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து சாலையோரம் கொட்டிக் குவிந்து கிடந்த 16 டன் காய்கறிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், அந்த வழியாக சென்றவர்கள் விபத்து பற்றி கவலைப்படாமல் பைகளிலும், மூட்டைகளிலும் வாரிச் சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in