

சென்னை: சென்னையில் அடுத்தடுத்து 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 பிரபல தனியார் பள்ளிகளின் இமெயில் முகவரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கிடைக்காததால், இது வெறும் புரளி என தெரியவந்தது.
முன்னதாக மிரட்டல் இ-மெயில் கிடைத்தவுடன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் பதற்றத்துடன் பள்ளிக்கு விரைந்து வந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.