

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் புதுடெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க போலீஸார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த அக்டோபர் 20-ம் தேதி அதே பகுதி நடுவங்கரை பாலத்தின் கீழ் பகுதியில் கண்காணித்தனர். அங்கு மெத்தம் பெட்டமைன் வகை போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த அம்பத்தூரில் உள்ள புதூர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (28) என்பவரை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி கடந்த 31-ம் தேதி மாலை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில் போதைப் பொருள் வைத்திருந்த வியாசர்பாடி கணேசன் (51), திருவள்ளூர் மதன் (46), கொடுங்கையூர் ரவி (48) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னையைச் சேர்ந்த ராஜா (42), அவரது கூட்டாளி சத்திய சீலன் (36) ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.400 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன், 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 2 எடை மெஷின்கள், 2 பேக்கிங் மெஷின்கள், 5 செல்போன்கள், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜான் ஒக்காபர் என்ற கெம்பாலா (35) தலைமறைவாக இருந்தார். கும்பல் தலைவனாக செயல்பட்ட அவர் புதுடெல்லியில் தலைமறைவாக இருப்பதாக அரும்பாக்கம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு கடந்த 10 நாட்களாக முகாமிட்டு போலீஸார் கண்காணித்தனர்.
இதையடுத்து அம் மாநிலத்தில் பதுங்கி இருந்த ஜான் ஒக்காபரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.