

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு ஜனவரி 20-ம் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து ராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அங்கிருந்த ரகசிய கேமிராவை பறிமுதல் செய்து, லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் அங்கு டீ மாஸ்டராக பணிபுரிந்த மீரான் மைதீன்ஆகிய இருவரையும் கடந்த டிசம்பர் 23-ல் கைது செய்தனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கட்கிழமை நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து, ராமேசுவரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் கண்ணா மற்றும் மீரான் மைதீன் ஆகிய இருவரும் ஆஜர்படுத்தப்பபட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளையராஜா ஜனவரி 20-ம் தேதி வரையிலும் இருவருக்கும் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.