

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பயிற்சி மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் சந்தான கோபாலன் (23). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பார்மஸி கல்லூரியில் பயின்று வந்தார். கல்லூரி மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை பெண்கள் பிரிவில் உள்ள மருத்துவர்கள் கழிவறைக்குள் சென்ற சந்தானகோபாலன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர் வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடந்துள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் மாணவர் சந்தானகோபாலனை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லிபாளையம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் அதிகப்படியான வலி நிவாரணி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தியதால் இறந்தது தெரியவந்தது. மேலும், போதைக்காக அம்மருந்தை அவர் பயன்படுத்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேக்கின்றனர். சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.