

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். அவர், கடந்த 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தனது தோழிகளுக்கு வாழ்த்து கூறுவதற்காக, மருத்துவமனையின் மகப்பேறு வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். மேலும், இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆதாம்(25) என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைப் பார்க்க வந்ததாகவும், அப்போது மது போதையில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.