

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தயாராகி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஞானசேகரன் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருட்டு, வழிப்பறி, துப்பாக்கி முனையில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஞானசேகரன், அடுத்தகட்டமாக பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
இலவசமாக பிரியாணி கொடுத்தே பல நபர்களை நட்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் மேலும் பல பெண்களிடம் கைவரிசை காட்டி இருக்க வேண்டும். அதேபோல், அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் தனியாக ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. அவரது பின்னணியில் மேலும் சிலர் இருக்க வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க 10 நாள் போலீஸ் காவலில் ஞானசேகரனை எடுக்க உள்ளோம். அதோடு மட்டுமல்லாமல் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுக்கவும் தயாராகி வருகிறோம். ஞானசேகரன் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அனைத்தையும் ஒன்று திரட்டி அதன் உண்மை தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
மாணவி தன்னை மருத்துவ பரிசோத னைக்கு உட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். ஞானசேகரனிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். வழக்கு தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களும் திரட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.