செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த நபர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அடுத்த திரிசூலம் பகுதியில் உள்ள வைத்தியர் தெருவில் வசித்து வருபவர் பாபு (44). இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களான கன்னியப்பன் மற்றும் மாலா ஆகியோருடன் கடந்த பல ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதனால், அடிக்கடி இருவீட்டாருடடன் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பல்லாவரம் போலீஸில் பாபு மற்றும் அவரது தந்தையான பொன்னுசாமி புகார் அளித்துள்ளார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து இருவரையும் எச்சரித்துள்ளனர்.

எனினும், மேற்கண்ட நபர்கள் இவரும் தொடர்ந்து தகராறு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன் புகார் மனு மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மற்றும் நிலப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக பாபு இன்று வந்தார். இந்நிலையில், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் பொட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அவரின் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். மேலும், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, 70 சதவித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்த நபர்கள் பொட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in