

சென்னை: ரோந்து பணியிலிருந்த பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தியதாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரிபவர் பூஜா (29). அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுப்புலட்சுமி (31). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு இளைஞர் ஓட்டிவந்த மற்றொரு இருசக்கர வாகனம், ரோந்து சென்ற போலீஸாரின் வாகனம் மீது மோதியது. இதில் காவலர் சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் இருவரும் அந்த இளைஞரைத் திட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் எஸ்.ஐ. பூஜாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு மேலும் சில போலீஸார் வந்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்டவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த உமர் உசேன் (24) என்பதும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும், அவர் தந்தை சென்னை துறைமுகத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து உமர் உசேனை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.