

மும்பை: கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தையொட்டிய கடற்பகுதியில் படகில் கடத்தி கொண்டுவரப்பட்ட 232 கிலோ ஹெராயின் போதைப் பொருளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.96 கோடி ஆகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து 3 சாட்டிலைட் போன், ஜிபிஎஸ் நேவிகேஷன் சார்ட், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் பங்கர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிபதி கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் போதைப் பொருளை கடத்தி வந்தது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதுதவிர, குற்றவாளிகள் அனைவரும் தலா ரூ.2 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.