

சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை, கணேசபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி(55). இவர் கடந்த 2021-ல் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 116-வது வார்டில் கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் கவுன்சிலர் சீட்டு பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.50 லட்சம் வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவரான எம்.பி.ரஞ்சன் குமார்(49) தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதை நம்பி 2021 டிசம்பர் முதல் ரஞ்சன் குமார் தெரிவித்ததின் பேரில், ரஞ்சித் குமார் என்பவரிடம் ஜானகி ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை பல்வேறு தவணைகளில் வழங்கி உள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி கவுன்சிலர் சீட் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த ஜானகி, கடந்த நவ.30-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். உரிய விசாரணை நடத்த ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். ஆனால், இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், விரக்தி அடைந்த ஜானகி, இவ்விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, புகாருக்குள்ளான எம்.பி.ரஞ்சன் குமார், அவரது கூட்டாளி ரஞ்சித் குமார் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இதேபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.