சென்னை | ரூ.17 கோடி மதிப்புள்ள 18 கிலோ போதை பொருள் பறிமுதல்: பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீத், முருகன், லாரன்ஸ்,  சரத்குமார், லட்சுமி நரசிம்மன், ஜான்சி மெரிடா
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீத், முருகன், லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி நரசிம்மன், ஜான்சி மெரிடா
Updated on
1 min read

சென்னை: ஹரியானா மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர், கடத்தி வருபவர், பதுக்கி வைத்திருப்பவர் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து, போதைப் பொருளுக்கு எதிரான நுண்ணறிவுப் பிரிவும் பிரத்யேகமாக தொடங்கப்பட்டது. அப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ம் தேதி மாதவரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த திருவல்லிக்கேணி வெங்கடேசன், அவரது கூட்டாளியான அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ போதைப் பொருள், 2 கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் சென்னை செங்குன்றம், வடகரையில் பதுக்கி வைத்திருந்த 15.900 கிலோ கிராம் போதைப் பொருளை மாதவரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட வெங்கடேசன் பஞ்சாப் மாநிலம், பட்டியலா மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். 7 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து 2021-ம் ஆண்டு விடுதலையானார். உறவினரான கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபு மற்றும் ஊரப்பாக்கம் சண்முகம் ஆகியோருடன் இணைந்து ஹரியானா மற்றும் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு போதைப் பொருள் மற்றும் அதனை தயாரிக்கும் மூலப்பொருளை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய புரசைவாக்கம் சாகுல் ஹமீத் மற்றும் லாரன்ஸ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த லாபத்தில் வாங்கப்பட்ட 2 வீட்டு சொத்துக்களின் ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். வெங்கடேசனுக்கு கூட்டாளியாக இருந்த அவரது மனைவி ஜான்சி மெரிடா மற்றும் மாதவரம் சரத்குமார், விழுப்புரம் லட்சுமி நரசிம்மன், அருப்புக்கோட்டை முருகன் ஆகிய 6 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து மொத்தம் 17.815 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.17 கோடி என போலீஸார் தெரிவித்தனர். இவர்களின் பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in