தாம்பரம் அருகே மருந்துக் கடையில் ஊசி போட்டுக் கொண்ட மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே மருந்துக் கடையில் ஊசி போட்டுக் கொண்ட மாணவர் உயிரிழப்பு
Updated on
1 min read

தாம்பரம் அருகே சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ் (19). கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். கடந்த 22ம் தேதி சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது தாயார் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள மருத்துவரை பார்க்க அழைத்து சென்றுள்ளார். அங்கு கிளினிக் மூடப்பட்டிருந்ததால் அருகில் இருந்த மருந்து கடையில் கேட்டபோது அங்கிருந்த ஒருவர் சந்தோஷை பரிசோதித்து விட்டு காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் 23ம் தேதி சந்தோஷுக்கு ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது உடனே அந்த மருந்து கடையில் சென்று கேட்டபோது தைலம் தேய்த்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளனர். அதன் பிறகு கை கால்கள் வீங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட சந்தோஷ் உடல்நிலை மோசமாகி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்த பெற்றோர் தனது மகன் ஊசி போட்டதாலே உயிரிழந்ததாக சேலையூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். இதனை தொடர்ந்து சந்தோஷ் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சேலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சந்தோஷின் உயிரிழப்புக்கு ஊசி போட்டதுதான் காரணம் எனக்கூறி அவரது நண்பர்கள் மருந்துக்கடையை சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மருந்து கடை மூடப்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மருந்துக்கடை நடத்தி வரும் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிஏ படித்துள்ள அப்பெண் 20 வருடங்களாக மருந்துக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஊசி போடவில்லை என அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in