

சென்னை: சென்னையில் போஸ்டரில் இடம்பெற்றிருந்த முதல்வர் படத்துக்கு அவமரியாதை செய்த மூதாட்டி மீதும், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் படம் இடம்பெற்ற போஸ்டரை மூதாட்டி ஒருவர் அவமரியாதை செய்த வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அந்த வீடியோவில், சென்னை விருகம்பாக்கம் பரணி மஹால் அருகில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருப்பதும், அப்போது, அந்த பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணியில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெற்ற போஸ்டரை கண்டு, அந்த மூதாட்டி அவமரியாதை செய்வதும் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மூதாட்டி மீதும், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் பிரதீஷ் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் இந்த வழக்குப் பதிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்குக் கட்டுக்கடங்காத கோபம் இருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது. நியாயப்படி, முதல்வர் தனது ஆட்சியைச் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதை விடுத்து, காணொலியை சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரை கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்யத் தேடி வருகின்றனர். திமுக ஆட்சியில், பாலியல் வன்கொடுமை செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.