

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காயத்துக்கு விரைவாக சிகிச்சை அளிக்க கூறி தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 26ம் தேதி இரவு முகத்தில் காயத்துடன் இளைஞர் ஒருவர் வந்தார். அவர், காயத்துக்கு விரைவாக சிகிச்சை அளிக்குமாறு அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு அனைவரையும் அவதூறாக பேசியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் கீழே தள்ளிவிட்டு தேசப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மருத்துவமனை போலீஸார், வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், அவர் புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த நந்தகுமார் (24) என்பதும், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், ஒருவரிடம் தகராறு செய்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், பேசின் பாலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.