

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் முன்பாக பாய்ந்து, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் கிண்டியில் வெல்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நாகராஜ் கடந்த சில நாள்களாக கடும் மனவேதனையில் இருந்துவந்தார். மேலும், வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில், அவர் கிண்டி ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை அருகே நேற்று நின்றுக் கொண்டிருந்தார். அப்போது எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி காலி விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் முன்பாக, நாகராஜ் திடீரென பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.