சதீஷ், பரத்
சதீஷ், பரத்

இளம் பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது @ சென்னை

Published on

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இளம்பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயன்ற காதலன் மற்றும் அவரது சகோதரரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்நேரிக்குப்பம் அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வாதி (30). இவர் கடந்த 25ம் தேதி தனது தம்பி சஞ்சய் ஸ்ரீராமுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த 2 இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை வழிமறித்து ஸ்வாதியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், ஸ்வாதி சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளிவிட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கோயம்பேடு போலீஸில் ஸ்வாதி அளித்த புகாரின் பேரில், அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் (32), அவரது சகோதரர் சதீஷ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், ஸ்வாதியை காதலிப்பதாகக் கூறி, பரத் அவரிடம் இருந்து பணம், நகையை பெற்று மோசடி செய்ததாகவும், இதுகுறித்து ஸ்வாதி போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் அவரை கார் ஏற்றி கொல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், இருவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in