‘3 தோட்டாக்கள் எங்கே?’ - துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

‘3 தோட்டாக்கள் எங்கே?’ - துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய அதிமுக நிர்வாகி வீட்டிலிருந்த பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும், டபுள் பேரல் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதோடு, கணக்கில் வராத 3 தோட்டாக்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பூமிநாதன், பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக நரிக்குடி அருகே உள்ள கச்சனேந்தலைச் சேர்ந்தவர் சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ந்து, அதிமுக சார்ந்த வாட்ஸ்-ஆப் குழுக்களில் நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் என்றே பூமிநாதன் பதிவிட்டு வந்தாலும், அண்மையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்ட சுவரொட்டிகளிலும் பூமிநாதன் தன்னை ஒன்றியச் செயலாளர் என்று குறிப்பிட்டிருந்ததாலும் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கல்விமடையில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொருளாளர் பிரபாத்திடம் நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன் கடந்த வியாழக்கிழமை மாலை புகார் தெரிவித்தபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், கல்விமடையில் உள்ள பிரபாத் வீட்டுக்குச் சென்ற சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரபாத்திடம் நேற்று சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பிரபாத் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார். அதனால் அனைவரும் சிதறி ஓடினர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரபாத் மீது அ.முக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு, அவர் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியையும், டபுள் பேரல் துப்பாக்கி ஒன்றையும் போலீஸார் இன்று கைப்பற்றினர். மேலும், கைத்துப்பாக்கிக்காக பெறப்பட்ட 50 தோட்டாக்களில் சுடப்பட்ட ஒரு தோட்டா போக, மீதம் 49 தோட்டாக்கள் இருக்க வேண்டும். ஆனால், போலீஸார் 46 தோட்டாக்களை மட்டுமே போலீஸார் கைப்பற்றினர். கணக்கில் வராத மீதம் உள்ள 3 தோட்டாக்கள் குறித்து பிரபாத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, தனக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபாத் உள் நோயாளியாக சிக்சைபெற்று வருகிறார்.

அதோடு, பிரபாத் கொடுத்த புகாரின் பேரில், வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக சந்தின் மற்றும் 5க்கும் மேற்பட்ட நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் தாமரைக்குளத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் தனிக்கொடி என்பவரையும், அதிமுக பிரமுகர் ராஜசேகர் என்பரவையும் அ.முக்குளம் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in