சென்னை | கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு

சென்னை | கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: பரங்கிமலையில் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர் சதீஷ் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விவரம் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா(20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022-ம் ஆண்டு அக்.13-ம் தேதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்து, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது.

70 பேரிடம் விசாரணை: போலீஸார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி, 'சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார். அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் சதீஷ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. எனவே, அவரை குற்றவாளி என அறிவிக்கிறேன். தண்டனை விவரம் 30-ம் தேதி தெரிவிக்கப்படும். அன்றைய தினம் சதீஷை மீண்டும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in