

புதுச்சேரி: டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி நாடு முழுவதும் ரூ. 66.11 கோடி மோசடி செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த மூவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த அழகம்மை, சைபர் கிரைம் போலீஸில் கடந்த ஜூன் 1-ம் தேதி புகார் தந்தார். அதில், அறிமுகமில்லாத நபர்கள் வாட்ஸ்அப் மூலமாக தங்களை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, புகார்தாரரிடம், உங்களுடைய ஆதார் மற்றும் செல்போன் எண்களை பயன்படுத்தி கம்போடியா மற்றும் தைவான் நாடுகளுக்கு மும்பையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கடத்தப்பட்டுள்ளது என்று கூறி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதை காரணம் காட்டி ரூ.27 லட்சம் பணத்தை இணையவழி மோசடிக்காரர்கள் பறித்து விட்டனர் என்று புகார் தந்தார். இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பல்வேறு வங்கி கணக்குகள், ஸ்கைப் ஆன்லைன் வீடியோ கால் மூலம் பண பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்குக்கு ரூ. 27 லட்சம் சென்றது தெரிந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான குழு கொல்கத்தா சென்று சம்பந்தப்பட்டோரை விசாரணைக்கு வருமாறு சம்மன் தந்தார். இதையடுத்து கொல்கத்தாவிலிருந்து அமித் சர்தார் (36), ராகேஷ் கோஷ் (39), சஞ்ஜிப் தேப் ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்தபோது மேற்படி வங்கி கணக்குகள் இந்தியா முழுவதும் பல வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
மேலும், இந்த வழக்கில் மோசடியான முறையில் பணம் பெறப்பட்ட குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி மொத்தம் ரூ.66.11 கோடி மோசடியை இவர்கள் செய்துள்ளனர். இதற்காக பல மாநிலங்களில் புகார்கள் பதிவானது தெரிந்தது. இதையடுத்து சைபர் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இணைய வழி குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை வாங்கி தருவது, பணத்தை அவர்கள் சொல்கின்ற வங்கி கணக்கிற்கு மாற்றுவது மற்றும் கிரிப்டோ கரன்சிகளை வாங்கி அவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்ற செயல்கள் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். >>மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’ என்றால் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை
இதுபற்றி எஸ்எஸ்பி நாரா சைதன்யா கூறுகையில், மூவரின் கைப்பேசிகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும், பல கோடி ரூபாய் மோசடியில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று நபர்கள் மும்பை, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளோம். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம், மும்பை போலீஸ் பேசுகிறோம், உங்களுடைய செல்போன் எண்ணை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது உங்களுடைய வங்கி கணக்கில் சட்டத்திற்கு விரோதமாக பண வருவாய் வந்துள்ளது என்று இதுபோன்று எந்த இணையவழி மோசடி மிரட்டல் அழைப்புகள் வந்தாலும் அதை நம்ப வேண்டாம்.
மேலும், நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். இது சம்பந்தமாக, உடனடியாக 1930 என்ற இணையவழி மோசடி குறித்து புகார் அளிப்பதற்கான ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல் வங்கி கணக்குகள், சிம் கார்டு ஆகியவற்றை பணத்துக்காக யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். மேற்படி வங்கி கணக்குகள், சிம் கார்டுகள் இணையவழி மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்பட்டு நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என்றார்.