

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அதிமுகவில் இரு தரப்பினரிடையே இன்று (டிச.27) தகராறு ஏற்பட்டது. அப்போது, தனது கைத்துப்பாக்கியால் அதிமுக நிர்வாகி ஒருவர் மேல் நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளராக பூமிநாதன் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நரிக்குடி அருகே உள்ள கச்சனேந்தலைச் சேர்ந்த சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ந்து, அதிமுக சார்ந்த வாட்ஸ்-ஆப் குழுக்களில் நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் என்றே பூமிநாதன் பதிவிட்டு வந்துள்ளார். அண்மையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்ட சுவரொட்டிகளிலும் பூமிநாதன் தன்னை ஒன்றியச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கட்சியினர் தொடர்ந்து எதிப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இப்பிரச்சினை கல்விமடையைச் சேர்ந்த அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் பிரபாத் என்பவரிடம் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், தொடர்ந்து தன்னை ஒன்றியச் செயலாளர் என பதிவிட்டுவரும் பூமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போதைய ஒன்றியச் செயலாளர் சந்திரன் வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக வியாழக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் கல்விமடையில் உள்ள பிரபாத் வீட்டுக்குச் சென்ற சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் பிரபாத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் உரிமம் பெற்று வைத்துள்ள கைத்துப்பாக்கியால் பிரபாத் மேல் நோக்கி ஒரு முறை சுட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.