

ராமேசுவரம்: அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அப்போது, அந்த அறையில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அந்த அறையை ஆய்வு செய்து, அங்கிருந்த ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த டீ ஸ்டாலை நடத்தி வந்த ராஜேஷ் கண்ணனைக் கைது செய்தனர்.
மேலும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடையில் டீ மாஸ்டராகப் பணிபுரிந்த ராமேசுவரம் ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் (37) என்பவரையும் போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
ஆட்சியர் எச்சரிக்கை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறநிலையத் துறை மூலம் பக்தர்களுக்காக ராமேசுவரம் கோயில் உட்பிரகாரத்தில் தீர்த்தத்தொட்டி அருகே ஒரு உடை மாற்றுவதற்கான கட்டிடமும், அக்னி தீர்த்தக் கடற்கரை எதிரில் ஒரு உடை மாற்றுவதற்கான கட்டிடமும் செயல்பட்டு வருகிறது. இவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் விடுதிகளில் சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.