

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம், ரத்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதை பயன்படுத்தி சிலர், பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு. “உங்களுடைய விமானப் பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றுக்கு இழப்பீடு கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் உங்களுடைய பயண விவரங்கள், ஆதார், பான் எண்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும்” என்று கேட்டு பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால், சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய அதிகாரிகள் எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்துக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக, போலியான செல்போன் அழைப்புகள் மூலம் பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இழப்பீடு கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே, அத்தகைய தகவல்களை பயணி கள் நம்ப வேண்டாம். தேவையெனில் பயணிகள் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்.
போலி தொலைபேசி அழைப்புகள் வந்தால், உடனடியாக, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.