

திண்டுக்கல்: வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது உயர் நீதிமன்ற உத்தரவி்ன் பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சிலுவத்தூர் சாலை பகுதியை சேர்ந்த கருப்பையா மனைவி விஜயலட்சுமி (60). இவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறோம். கடந்த பிப். 7-ம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பினோம். அப்போது, வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.3.23 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் திருடு போயின. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை என்ற பெயரில் எங்களை அலைக்கழித்தனர்.
மேலும், பெட்ரோல் பங்கில் பைக், அரசு ஜீப், காவல் ஆய்வாளரின் காருக்கு பணம் தராமல் பெட்ரோல், டீசல் நிரப்பிச் சென்றனர். அதேபோல, குற்றவாளிகளை தேடிச் செல்வதாகக் கூறி, வாகன ஏற்பாடு செய்வதற்கும் பணம் வாங்கினர்.
இந்நிலையில், எங்கள் வீட்டில் திருடிய நபரை கைது செய்ததை அறிந்து, காவல் நிலையம் சென்று விசாரித்தோம். அப்போது, 25 பவுன் நகைகள் மட்டும்தான் தர முடியும் என்றும், மீதமுள்ள நகைகள் கவரிங் நகைகள் என்றும் கூறிவிட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் முன்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த சந்திரமோகன், எஸ்.ஐ. அழகர்சாமி, காவலர் வினோத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார். ஆய்வாளர் சந்திரமோகன் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.