

சென்னை: தாயின் சிகிச்சை செலவுக்கு வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் விளையாடி இழந்த சென்னை இளைஞர் தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). கேட்டரிங் முடித்துவிட்டு சமையல் கலைஞராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை தேவராஜ் கிரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆகாஷ் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆகாஷின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆகாஷ், தனது தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் இன்று (டிச.21) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோட்டூர்புரம் போலீஸார், ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.