

திருப்பூர்: உடுமலை அருகே சாலையோர குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிளஸ் 1 மாணவி மற்றும் 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியது: உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (40). இவர் பெயின்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு வயது 16. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். இந்நிலையில், மாணவிக்கும் சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் (19) என்ற இளைஞருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. கடந்த 18-ம் தேதி அந்த மாணவியின் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிக்க ஆகாஷ் நேரில் வந்துள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் உறவு முறை கொண்ட கல்லூரி மாணவரான மாரிமுத்து (20) ஆகிய மூவரும் மானுப்பட்டி - எலையமுத்தூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலை ஓரம் இருந்த தனியார் குட்டையில் தவறி விழுந்துள்ளனர். வீட்டை விட்டு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அன்றே தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று சம்பவம் நடைபெற்ற குளத்தில் 3 பேரின் சடலங்கள் மிதப்பதை கண்டு, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் அவை மூவரின் சடலங்கள்தான் என்பது உறுதிசெய்யப்பட்டன . தீயணைப்பு துறை உதவியுடன் சடலங்கள் மீடக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அமராவதி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.