

சென்னை: மயிலாப்பூரில் உள்ள வாசனை திரவியம் விற்பனை செய்யும் கடையிலிருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணமா என கடை உரிமையாளர்களான சகோதரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சூளைமேடு போலீஸார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆகாஷ், கோகுல் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்திருந்தனர்.
இவர்களில் ஆகாஷின் செல்போனை ஆய்வு செய்தபோது, மயிலாப்பூரை சேர்ந்த அசோக் என்பவருக்கு ரூ.20 ஆயிரம் பணபரிமாற்றம் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறவைகள் மற்றும் நாய் குட்டிகள் வாங்கி விற்பனை செய்து வரும் அசோக்கை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ‘ஹவாலா பண’ புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவருடைய தாயார் சுதா ( 52), சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரிஜிஸ் என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது லண்டனில் வசிக்கும் ரிஜிஸின் உத்தரவின் பேரில் பல்வேறு நபர்களிடமிருந்து அசோக்கின் தொலைபேசி எண்ணுக்கு பணம் வருமாம்.
அந்த பணத்தை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் அகமதுஷா (48), அவருடைய தம்பி முகமது கலிமுல்லா (45) ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைப்பேன் என அசோக் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளான அகமது ஷா, கலிமுல்லா இருவரும் இணைந்து மயிலாப்பூர் கச்சேரி சாலையில் வாசனை திரவிய கடை நடத்தி வருகின்றனர்.
அசோக் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மயிலாப்பூரில் உள்ள அகமது ஷாவின் திரவிய கடையில் சூளைமேடு தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த கணக்கில்வராத பணம் ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் மற்றும் 140 கிராம் தங்கக் கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அகமதுஷா, கலிமுல்லா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.