சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ ராஜா சிங் பணியிடை நீக்கம்
சென்னை: சென்னையில் கத்தி முனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ ராஜா சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரி ஒருவரிடம் ரூ.1.50 லட்சம் பறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். இவர் சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, தன்னிடம் பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் (36) என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து கடந்த 15- ம் தேதி சென்னைக்கு அனுப்பி உள்ளார். அந்த பணத்தை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுப்பதற்காக முகமது கவுஸ் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடந்த 16-ம் தேதி இரவு சென்றுள்ளார்.
திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்கிடம் (48) சிக்கினார். விசாரணையில், முகமது கவுஸ் கொண்டு வந்த ரூ.20 லட்சத்துக்கு ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, ராஜா சிங் தனது கூட்டாளிகளான வருமானவரித் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பிரபு (31), ஆய்வாளராக பணியாற்றும் தாமோதரன் (41), ஊழியர் பிரதீப் (42) ஆகியோர் மூலம் கத்தி முனையில் முகமது கவுஸிடமிருந்த பணத்தை பறித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த திருல்லிக்கேணி போலீஸார் ராஜாசிங், பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங்கை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் இன்று உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து ராஜா சிங்கின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டது.
இதில், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், 15.04.1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்திருந்ததும், 2014-ல் யானைகவுனி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணி செய்தபோது வியாபாரியிடமிருந்து ரூ.1.50 லட்சம் பறித்ததும், இதற்காக 6 மாத காலம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் இதேபோல் பலரிடம் பணம் பறித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, சிறையில் உள்ள உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட கூட்டாளிகளான வருமான வரி அதிகாரிகள் 3 பேர் என 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
