

ஜிஎஸ்டி வரி பாக்கிக்கான அபராதத்தை குறைக்க சரக்கு போக்குவரத்து நிறுவன உரிமையாளரிடம் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக், அழகர்கோவில் பகுதியில் சரக்குப் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார். ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவது தொடர்பாக மதுரை பீபி குளத்தில் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தை கார்த்திக் அணுகியுள்ளார். அங்கு பணியில் இருந்த துணை ஆணையர் சரவணகுமார்(37) ஜிஎஸ்டி வரி பாக்கிக்கான அபராதம் ரூ.1.50 கோடியில் குறிப்பிட்ட தொகையை குறைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ரூ.3.50 லட்சம் தருவதாகக் கூறிய கார்த்திக், இது தொடர்பாக மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். சிபிஐ அதிகாரிகள் அளித்த யோசனையின்படி நேற்று முன்தினம் இரவு மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில், ரசாயனம் தடவப்பட்ட ரூ.3.50 லட்சம் நோட்டுகளை அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார் (45), ராஜ்பீர் சிங் ராணா (33) ஆகியோரிடம் கார்த்திக் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த சிபிஐ கண்காணிப்பாளர் கலைமணி, ஆய்வாளர் சரவணன் அடங்கிய குழுவினர் இருவரையும் பிடித்தனர். விசாரணையில், துணை ஆணையர் சரவணகுமாருக்காக லஞ்சப் பணம் வாங்கியது தெரிந்தது. இதையடுத்து, சரவணகுமார், அசோக் குமார், ராஜ்பீர் சிங் ராணா ஆகியோர் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜிஎஸ்டி ஆய்வாளர் சமீர் கவுதம் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
வீட்டில் சோதனை: ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமாருக்கு சொந்தமான வீடு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் உள்ளது. இங்கு சிபிஐ டிஎஸ்பி தண்டபாணி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு வந்தனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துவிட்டு, பல மணி நேரம் காத்திருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு அங்கு வந்த சரவணகுமாரின் சகோதரர் கண்ணன் முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டைத் திறந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
மதுரையில் கைது செய்யப்பட்ட ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் (முன்னால் செல்பவர்) உள்ளிட்ட 3 பேரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி