

அவிநாசி: கஞ்சா விற்பதாக கூறி ரூ. 40 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கடத்திய, 6 பேரை பெருமாநல்லூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டி பாரதிபுரத்தை சேர்ந்தவர் ராமன் (23). இவரது தம்பி லட்சுமணன் (22). சகோதரர்கள் திருப்பூர் அண்ணாநகர் குமரன் காலனியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ராமன் திருப்பூரில் பணியாற்றும் தனது சக நண்பர்களான சஞ்சய் மற்றும் அர்தகக் அவதேஷ்ராய் ஆகியோருக்கு அவரது ஊரை சேர்ந்த ராமு என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார். ராமு, ராமனின் நண்பர்களான சஞ்சய் மற்றும் அர்தகக் அவதேஷ்ராய் ஆகியோருக்கு கஞ்சா வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து ராமுவிடம் ரூ. 40 ஆயிரம் கொடுத்து, கஞ்சா பொட்டலத்தை பெற்றுள்ளனர். அதனை சஞ்சய் மற்றும் அர்தகக் அவதேஷ்ராய் ஆகியோர் அறைக்கு சென்று பார்த்தபோது, அதில் கஞ்சா இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெறும் காகிதத்தை வைத்து பணத்தை பறித்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பணத்தை திரும்பத்தருமாறு, வேலைக்கு சென்ற ராமனை கடத்திச்சென்று நல்லாத்துபாளையத்தில் உள்ள அறையில் அடைத்துவைத்து துன்புறுத்தினர்.
அறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் ராமன், தனது தம்பியான லட்சுமணனிடம் தெரிவிக்கவே, அவர் பெருமாநல்லூர் போலீஸாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்ற சென்ற போலீஸார் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ரந்தீர்கமத் (23), கேரளாவை சேர்ந்த அர்தகக் அவதேஷ்ராய் (25) மற்றும் திருப்பூரை சேர்ந்த நிதின்(23), ராஜா(38), குமரன்(22) மற்றும் சஞ்சய்(22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் ரூ. 40 ஆயிரம் பெற்றுக்கொண்டு, தலைமறைவான ராமுவை (25) பெருமாநல்லூர் போலீஸார் தேடி வருகின்றனர்.