சென்னை | வருமானவரி துறை அதிகாரி என கூறி இளைஞரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி

சென்னை | வருமானவரி துறை அதிகாரி என கூறி இளைஞரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி
Updated on
1 min read

சென்னை: வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, இளைஞரை காரில் கடத்தி கத்திமுனையில் ரூ.20 லட்சத்தை பறித்துவிட்டு தப்பிய கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. இவர் சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, தன்னிடம் பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவைச் சேர்ந்த முகமது கவுஸ் (31) என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து கடந்த 15-ம் தேதி சென்னைக்கு அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொடுப்பதற்காக கவுஸ் தனது வீட்டிலிருந்து மொபெட்டில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அவர், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது, அங்கு காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் இருந்த ஒரு நபர் மறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த பணத்துக்குரிய ஆவணங்களைக் காண்பிக்கும்படி கேட்டுள்ளார்.

அதே வேளையில், அந்த நபர் செல்போன் மூலம் சிலரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சில நிமிஷங்களில் அங்கு காரில் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக்கூறி கவுஸிடம் மிரட்டும் வகையில் பேசினர். மேலும் தங்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரும்படி கவுஸை காரில் ஏற்றினர்.

கார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே வந்தபோது அவர்கள் கவுஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. கவுஸ் இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரிக்கின்றனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்புத் துலக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in