

சென்னை: சென்னையில் மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 21 வயது மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி, சென்னை அண்ணாசாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி மாணவியின் நிலையை சாதகமாக்கிக் கொண்டு, சிலர் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக, மாணவியின் தந்தை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், மாணவியுடன் கல்லூரியில் படிக்கும் சக தோழி மூலம் அறிமுகமான கல்லூரி மாணவர்களால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதையும், அதற்கு மாணவியின் தோழி உடந்தையாக இருந்ததையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று முன்தினம், நந்தனம் கல்லூரியில் படிக்கும் திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ்(20), அவரது நண்பரான 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஆகிய இருவரையும் பிடித்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில், திருவள்ளூரை சேர்ந்த மணி என்ற சுப்பிரமணி, அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பாதிக்கப்பட்ட மாணவியின் கல்லூரி தோழி உள்பட மற்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவியின் தோழியை பிடித்து விசாரணை நடத்திய பிறகு, இந்த வழக்கின் முழு விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.