

சென்னை: கோவை பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தலைமை ஆசிரியர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2018-ல் நடந்த சம்பவம் தொடர்பாக 3 ஆண்டுகள் கழித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு எதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று தலைமை ஆசிரியர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவில், "பள்ளியில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும். மாணவிக்கு நடந்தது குறித்து குழந்தைகள் நல அதிகாரி உள்ளிட்டோரிடம் புகார் அளிக்காதது தவறுதான். போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.