சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் வாகன திருட்டு: கொள்ளையன் கூட்டாளியுடன் கைது
சென்னை: சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு, மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பஹீம் (46). இவர், பெரியமேடு வீராசாமி தெருவில் காலணி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 22-ம் தேதி மதியம், தனது இருசக்கர வாகனத்தை தனது கடை முன்பு நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த முகமது இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்புத் துலக்கினர். இதில், முகமதுவின் இருசக்கர வாகனத்தைத் திருடியது கொருக்குப்பேட்டை, அண்ணாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த செல்வம் (38), அவரது கூட்டாளியான அதேபகுதி அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்த ரவி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைதான இருவரும் முகமது வாகனம் மட்டுமல்லாமல் யானைக்கவுனி, ஏழுகிணறு மற்றும் 2 இடங்களில் 4 இருசக்கர வாகனங்களை திருடியுள்ளதும், கடந்த 26-ம் தேதி பல்லவன் சாலை மேம்பாலம் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஜெரேமியா (47) என்பவரைத் தாக்கி அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் கைதான செல்வம் மீது திருவண்ணாமலை, தாம்பரம், பூந்தமல்லி, யானைக்கவுனி, ஏழுகிணறு ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 8 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
