பாலாஜி
பாலாஜி

சென்னை | ஆட்டோவில் தூங்கியவரை தீ வைத்து எரித்த ரவுடி கைது: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

Published on

சென்னை: முன் விரோதத்தில் மீன்பாடி வாகன ஓட்டுநரை ஆட்டோவுடன் தீ வைத்து கொளுத்தியதாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை, சைவ முத்தையா 6-வது தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (48). மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதால், தினமும் இரவு அவரது வீட்டினருகே, சைவ முத்தையா 6-வது தெருவிலுள்ள விஜயகுமார் என்பவரது ஆட்டோவில் தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், துரைசாமி வழக்கம்போல கடந்த 22-ம் தேதி இரவு ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் படுத்திருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், துரைசாமியின் தலை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்ட உடன் அவர் சுதாரித்து எழுந்து கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும், துரைசாமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீஸார் விசாரித்தனர். இதில், முதலில் தற்செயலாக ஆட்டோ தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோதுதான் ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவர் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி, துரைசாமியை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பாலாஜியை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘ஏற்கெனவே பாலாஜிக்கும், துரைசாமிக்கும் முன்விரோதம் இருந்துள்ள நிலையில், சம்பவத்தன்று துரைசாமி ஆட்டோவில் தூங்குவதை கண்ட பாலாஜி, ஆட்டோவை தீ வைத்து கொளுத்திவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைதான பாலாஜி மீது ஏற்கெனவே 3 கொலை முயற்சி உட்பட சுமார் 12 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in