

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது நேற்று லாரி அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
செம்பட்டி அருகே வீரச்சிக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சடைமாயன் (45). இவர் தனது மனைவி ரதியுடன் வீரசிக்கம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் குளத்தூரைச் சேர்ந்த நாகராஜ் (35), காதர் ஒலி (38). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள், செம்பட்டி-வத்தலக்குண்டு சாலை புல்லாவெளி கண்மாய் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே கேரளாவில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற லாரி, இரண்டு இரு சக்கர வாகனங்களின் மீதும் அடுத்தடுத்து மோதியது.
இதில் நாகராஜ், காதர்ஒலி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சடைமாயன், ரதி ஆகியோரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சடைமாயன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.