

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் உறவினரிடம் `டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிக்கு முயன்றது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம், வெள்ளையன் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (81). இவர் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் நெருங்கிய உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆனந்தின் வாட்ஸ்-அப் எண்ணை கடந்த 18-ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னை கர்நாடக மாநில போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார்.
மேலும், ஆனந்தின் ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகத்தில் வாடகை கார் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாகவும், கார் பெரும் விபத்தில் சிக்கி சிலரை காயப்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார்.
அந்த நபரின் பேச்சு சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் ஆனந்த் சுதாரித்துக் கொண்டு, அந்த நபருடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து அவர், சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.