

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த 16-ம் தேதி அதிகாலையில் திரையரங்க வாயிலில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்து, தப்பியோடிய நபர்களைத் தேடி வந்தனர். தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் (30), ஆசிரான் மேலத்தெரு செய்யது முகமது புகாரி (29) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.