

சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை, கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த 13-ம் தேதி அவரது அறையில் விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளியேறும்போது சக பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் மருத்துவர்களிடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, "மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஆயுதம் எடுத்து வந்து, விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது" என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.