

சென்னை: மும்பை போலீஸ் என கூறி, ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியை மிரட்டி ரூ.88 லட்சம் பறித்ததாக அசாம் இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார்.
இவரது செல்போன் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த செப்.3-ம் தேதி, அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், ‘‘மும்பை காவல்துறை அதிகாரி பேசுகிறேன். உங்கள் மீது பண மோசடி தொடர்புடைய கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது.
எனவே, மும்பைக்கு நீங்கள் நேரில் வந்து ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் நாங்கள் சென்னை வந்து உங்களைக் கைது செய்வோம். மேலும், வழக்கு தொடர்பாக சில தகவல்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) மூத்த அதிகாரி பேசுவார்’’ எனக் கூறி இணைப்பை மாற்றி உள்ளார்.
அதில், பேசிய நபர், குடும்பம் மற்றும் வங்கி விவரங்களைக் கேட்டறிந்தார். விசாரணை முடியும் வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ‘‘நீங்கள் குற்றமற்றவர் என நிரூபிக்க உங்களது நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் தெரிவிக்கும் ரிசர்வ் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்க வேண்டும். சரிபார்ப்புக்கு பின்னர் உங்கள் மீது தவறு இல்லை என்றால் அந்த பணத்தை உடனடியாக உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப அனுப்பி விடுவேன்’’ என தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என நம்பி, அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு இரு தவணையாக ரூ.88 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மும்பை போலீஸ் அதிகாரி என மிரட்டி பணம் பறித்த நபர்களை கைது செய்து, பணத்தை மீட்டுத் தருமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கப்பட்டுள்ள மேற்கூறிய வங்கிக் கணக்குக்கு நாடுமுழுவதும் 178 வங்கிகளில் இருந்து ஒரே நாளில் ரூ.3.82 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அசாம் மாநிலம் சென்ற தனிப்படை போலீஸார், மோரிகோன் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தா பிரதிம் போராவை(38) கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.