

சென்னை: அதிக விலை கொண்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரிய இளைஞர் உட்பட 13 பேரை சென்னை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
சென்னையில் போதைப் பொருள் ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தும்படி போலீஸாருக்கும் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டடனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நந்தனம் ஒய்எம்சிஏ அருகில் மெத்தம் பெட்டமைன் என்ற விலை உயர்ந்த போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த அயனாவரத்தைச் சேர்ந்த சபீர் அகமது (26) கைது செய்யப்பட்டார். இதேபோல் முன்னதாக சென்னை அரும்பாக்கத்தில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜா நிபோன்யே பிலிப் (31), ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆனந்த் குமார் (40), அதே மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கி வெங்கட ரமணா (43), சென்னை நெற்குன்றம் ஹரி (29), அரும்பாக்கம் பிரசாந்த் (29), ராயப்பேட்டை ஐசக் கீர்த்தி ஐரிலண்டு (30) ஆகியோரை அரும்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சிட்லபாக்கம் கிறிஸ்டோ பிரசன்ன குமார் (30), மூலக்கடை தமிழரசன் (40), அயனாவரம் ராஜா விக்ரமன் (31), கே.கே.நகர் தினேஷ் (28), காவாங்கரை ரகிம் பாஷா (30), கொடுங்கையூர் சலமான் (23) என மொத்தம் 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள், கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.