

சென்னை: விலை உயர்ந்த மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார் அதே பகுதியில் கடந்த மாதம் 4-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து அதிலிருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதையடுத்து, அவர்களது காரை சோதித்தபோது விலை உயர்ந்த மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருளை கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சின்வேபா ஜோஸ்வா(35) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 20 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மடிப்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் நடந்த சோதனையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் பிரைநாட்(24), ஆதம்பாக்கம் கோபாலகிருஷ்ணன் (24), திருச்சி துறையூர் பிரதீப்(27), வில்லிவாக்கம் சகாபுதீன்(24), கெருகம்பாக்கம் பிரகாஷ்(27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 24 கிராம் பெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள், 1 எடை இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.