

திருப்பூர்: திருப்பூரில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகர் குப்பை மேட்டில் நேற்று இரவு (நவ.12) குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது, துணியுடன் சுற்றப்பட்ட பையில் ஆண் குழந்தை ஒன்று துடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15 வேலம்பாளையம் போலீஸார் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்த ஆண் குழந்தையை போலீஸ் ஜீப்பில் எடுத்துச் சென்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 15.வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிறந்து சில மணி நேரத்திலேயே பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசி சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.