

தூத்துக்குடி / சென்னை: உடன்குடியில் பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, அப்பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
உடன்குடியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பொன்சிங் (42). இவர், கடந்த மாதம் 22-ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் முறையிட்ட பிறகும், பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்காமல் காலம்கடத்தியுள்ளது. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையில், கோவையில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கைது செய்யப்பட்டார். மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக, பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின், செயலாளர் செய்யது அகமது ஆகியோர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்தப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.