உ.பி.யில் யூடியூபை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்த 2 பேர் கைது

உ.பி.யில் யூடியூபை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்த 2 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி.யில் யூடியூபை பார்த்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சோன்பத்ரா மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற சதிஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆல்டோ கார், பிரின்ட்டர், லேப்டாப் மற்றும் 27 முத்திரைத் தாள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் யூடியூபை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ரூ.10 மதிப்பிலான முத்திரைத் தாளை மிர்சாபூரில் இருந்து வாங்கி வந்துள்ளனர். அதில் 500 ரூபாய் நோட்டுகளை கணினி பிரின்ட்டரில் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை அனைத்தும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கலு சிங் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.500 மதிப்பிலான 20 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை கள்ள நோட்டு என்பதை அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அசல் ரூபாய் நோட்டுகளைப் போலவே இருந்தன. அசல் ரூபாய் நோட்டுகளில் உள்ள சில சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே கள்ள நோட்டு என்பதை கண்டறிய முடியும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in