

சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்-அப் ஹேக் செய்யப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் இலங்கை துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்தின் ஆணையராக கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன் உள்ளார். இவரது வாட்ஸ்-அப் செயலி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஹேக் செய்யப்பட்டது.
தூதரக ரகசிய பரிமாற்றங்கள் எதையாவது திருடும் நோக்கில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டதா? என அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தார். மேலும், சேத்துப்பட்டு காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் தூதரக ஆணையர் கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரனின் வாட்ஸ்-அப் செயலி வழக்கம்போல் செயல்பட ஆரம்பித்தது. இருப்பினும் இதுபோன்று செய்தது யார்? எந்த நாட்டிலிருந்து இதுபோல் ஹேக் செய்யப்பட்டது என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.